வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் நிலையில், இன்று தெற்கு மற்றும் டெல்டாவிலுள்ள 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே நாளை உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஒருவாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இடியுடன் கனமழை பெய்தது. திருவாரூர், விளமல், கங்களாஞ்சேரி, சேந்தமங்கலம், தண்டலை, மாங்குடி, மாவூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், கனமழையின் காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கக் கூடும் என கவலை அடைந்துள்ளனர். சென்னையில் அதிகாலையில் சிறிதுநேரம் கனமழை பெய்தது.
இதனிடையே, இன்று தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
















