இந்தியாவிலேயே 42 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் என்ற பெருமையை, தமிழகம் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சுழற்சங்கம் சார்பில் 200 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் கனிமொழி கலந்துகொண்டு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் எந்த பெண்களும் படிக்காமல் இருந்ததில்லை என்ற நிலை ஏற்படுவதற்கு திமுக தான் காரணம் என குறிப்பிட்டார். பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்பதற்கென மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டதாகவும், அதிகம் உழைக்கும் பெண்கள் இருப்பது தமிழகத்தில் தான் என்றும் கனிமொழி கூறினார்.