பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், இறுதியில் அவமானத்தையே சந்தித்ததாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜே.பி.நட்டா மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் மோடியை பாராட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எம்.பி.க்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், இறுதியில் தங்கள் கால்களை, தாங்களாவே சுட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார் என, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் இதுபோன்ற விவாதங்களை தினந்தோறும் நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும். அது நமது ஆளுகைக்கு உட்பட்ட இடம். இறைவனும் நம்முடன் இருக்கிறான் என்று மோடி கூறியதாகத் தெரிகிறது.
மேலும், இந்திய நிலப்பரப்பை, சீனா ஆக்கிரமித்துவிட்டதாக ராகுல் காந்தி பேசியதை மறைமுகமாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நேற்று உச்சநீதிமன்றம் கண்டித்ததைவிட, கடுமையான கண்டனம் வேறு எது இருக்க முடியுமா? எனத் தெரிவித்ததாகவும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.