சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுக்காக சென்றிருந்த இந்தியாவின் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் குழு பயணத்தை வெற்றிகரமாக முடிந்து பூமிக்கு புறப்பட்டது. 23 மணி நேரம் பயணித்து நாளை பிற்பகல் பூமியை வந்தடைய உள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன்-4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். சுபன்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம், ககன்யான் உள்ளிட்ட இந்தியாவின் விண்வெளிப் பயண இலக்குகளை அடையும் பாதையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில், 18 நாள் ஆய்வை வெற்றிகரமாக முடித்த சுபான்ஷு சுக்லா குழுவினர் இந்திய நேரப்படி இன்று மாலை 4.35 மணிக்கு பூமிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரியும் நடைமுறையில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுபான்ஷு சுக்லா குழுவினருடன் அந்த விண்கலம் புறப்பட்டு பூமிக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த விண்கலம், நாளை பிற்பகல் 3 மணிக்கு, வட அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அமெரிக்கா கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.