நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், உறவினர்கள் போராட்டம் நடத்தியதால், பதற்றம் நிலவி வருகிறது.
வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சபரிகண்ணனை, ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு, ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு வரும் போது, பூச்சிக் கொல்லி மருந்து உட்கொண்டதாக தெரிகிறது. பின்னர் வகுப்பறையில் மயங்கி விழுந்த சிறுவன் சபரிகண்ணன், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தான். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் சடலத்தை வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு வைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவன் பயின்ற பள்ளிக்கு சொந்தமான 2 பேருந்துகள் மீது, பெட்ரோல் குண்டு வீசியதாக சொல்லப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவனின் உறவினர்கள் மறுத்துள்ளனர்.
கவனத்தை திசை திருப்ப, பள்ளி நிர்வாகமே பேருந்துக்கு தீ வைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.