கொக்கைன் போதை பொருள் வழக்கில் பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகியோரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொக்கைன் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே போல் நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத், கானா நாட்டைச் சேர்ந்த ஜான், கொக்கைன் விற்பனை டீலர் பிரதீப் குமார், மற்றும் அவரது நண்பர் கெவின் ஆகியோர் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ள 4 நபர்களையும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் போதை பொருள் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நான்கு நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் 4 பேரையும் நுங்கம்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையின் முடிவில் போதை வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.