அதிமுக தொண்டர்கள் விருப்பப்படி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில், எதிர்கால திட்டம் குறித்து செப்டம்பர் 4-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் அறிவிப்போம் என்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆதரவாளர்களும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பி.எஸ், தங்களின் நோக்கம் அதிமுக-வை மீட்பதுதான் என்றும், அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அதை நோக்கிய சட்டப்போராட்டம் தொடரும் என்று கூறினார்.
மேலும் தங்களின் எதிர்காலத் திட்டம் குறித்தும், முக்கிய முடிவுகள் குறித்தும் வரும் செப்டம்பர் மாதம் 4-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.