பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூருக்கு உலகளவில் ஆதரவு கிடைத்தும், அதைப் பாராட்டாத காங்கிரஸ் கட்சி, பஹல்காமில் அப்பாவிகளின் இறப்பை வைத்து அரசியல் செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேசன் சிந்தூர் குறித்து இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கும் என்று கருதிய பாகிஸ்தான் ராணுவம், அணு ஆயுத அச்சுறுத்தலைத் தொடங்கியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
ஆனால், மே 6 ஆம் தேதி இரவு திட்டமிட்டபடி, நமது படையினர் பாகிஸ்தானின் இலக்குகளை 22 நிமிடங்களில் தாக்கி அழித்ததாகவும், அந்நாட்டினால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் மோடி கூறினார். மே 9 ஆம் தேதி இரவு, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பேசும்போது, பாகிஸ்தான் பெரும் தாக்குதலை நடத்தப்போவதாக கூறினார். அதற்கு பலமடங்கு பதிலடியை கொடுப்போம் என்றும் தாம் சொல்லியதாக மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூருக்கு, 193 நாடுகளில் மூன்று நாடுகளை தவிர மற்ற நாடுகளின் ஆதரவு கிடைத்தது. ஆனால், இங்குள்ள காங்கிரஸ் கட்சி இந்திய படையின் துணிச்சலைப் பாராட்டாமல், அப்பாவிகளின் இறப்பை வைத்து அரசியல் செய்வதாக மோடி குற்றம்சாட்டினார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிந்துவிடவில்லை, இன்னமும் தொடர்வதாகவும் பிரதமர் கூறினார்.
பாகிஸ்தான் ஏதாவது ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால், உரிய பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும் என்ற மோடி, தற்போது இந்தியா முழுமையான தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்வதாகக் குறிப்பிட்டார்.