இஸ்லாமியர்கள் இந்தாண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தநிலையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான இணையதளம் செயல்படத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஹஜ் சுவிதா மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த மாத இறுதி வரை விண்ணப்பதாரர்கள் வசதிக்காக இணைய தளம் செயல்பாட்டில் இருக்கும்.
இதற்கிடையே, குறைந்தது டிசம்பர் 2026 வரையிலான செல்லத்தக்க பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் தயார் நிலை மற்றும் அதற்கான விதிமுறைகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான மருத்துவ காரணம் அல்லது எதிர்பாராத மரணம் போன்ற காரணங்களை தவிர்த்து, விண்ணப்பத்தை ரத்து செய்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

















