லாக்கப் மரணங்கள் தொடர்பாக யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். இதில், தலைமைச் செயலாளர் முருகானந்தம். உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தருவதுடன், இவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுபவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
குற்றங்களில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் தமது அரசு திகழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.