சென்னை: இந்து சமயத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படும் துளசி, பெருமாளுக்கு (விஷ்ணு) மிகவும் பிடித்தமான மூலிகை என அறியப்படுகிறது. பெருமாள் வழிபாட்டில் துளசி இல்லாமல் ஆன்மீக கிரியைகள் முற்றுப்பெறுவதில்லை என்றே கூறலாம். கோவில்களில் துளசி மாலை சாற்றி பெருமாளை பூஜிக்கின்றனர். மேலும் தீர்த்தத்தில் கூட துளசி இலைகள் சேர்க்கப்படும்.
துளசி மாலை அணிவது வெறும் ஆன்மீக உணர்வாக மட்டுமல்ல, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானதாகும். இயற்கையிலேயே துளசி மாலை உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. உண்மையான துளசி மாலை என்பது துளசி செடியின் தண்டுகள் மற்றும் வேர்களால் தயாரிக்கப்படும்.
துளசி மாலை அணியும் முறைகள் – சாஸ்திரப்படி:
புதிய துளசி மாலையை கடையிலிருந்து வாங்கியவுடன் உடனே கழுத்தில் அணியக்கூடாது. முதலில் அதை மஞ்சள் கலந்த நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவி, வீட்டின் பூஜை அறையில் பெருமாள் அல்லது மகாலட்சுமி படத்துக்கு சாற்றி, இறைவனை வேண்டிக்கொண்டு பின்பு அணிந்து கொள்ள வேண்டும்.
துளசி மாலை – ஜெப பயன்பாடு:
சிலர் இந்த மாலையை ஜெபத்திற்காக மட்டும் பயன்படுத்துவார்கள். சிலர் மந்திரங்களை எண்ணுவதற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஜெபம் செய்யும்போது மாலை அடுத்தவர் பார்வைக்கு தெரியாமல் இருப்பது சாஸ்திரப்படி அவசியமாக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தங்கள் முந்தானையில் மறைத்து மாலையை உருட்ட வேண்டும். ஆண்கள் தங்கள் அங்கவஸ்திரத்தில் மூடி உருட்ட வேண்டும். இதற்காக ஜெபமாலை பைகள் (Japa Mala Bags) என்ற சிறப்பு பைகள் கிடைக்கின்றன, அவற்றைப் பயன்படுத்தலாம்.
துளசி மாலை என்பது வெறும் ஆடம்பரமான ஆன்மீக அழகு சாதனம் அல்ல, இறைவனின் அருளையும், மன அமைதியையும் தரும் ஒரு தெய்வீக கருவி என்பதே பக்தர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை!