ஏற்காடு: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுதீஷ்குமார் (வயது 45), ஏற்காடு தலைச்சோலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். அவர் தனது மனைவி மகேஸ்வரியுடன் அங்குள்ள விடுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை திடீரென சுதீஷ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக மகேஸ்வரி ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சுதீஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடல் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், சுதீஷ்குமாரின் மனைவி என்று கூறும் மகேஸ்வரியிடம் திருமணச் சான்று உள்ளிட்ட ஆதார ஆவணங்கள் இல்லை என்பதால், அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சுதீஷ்குமாரின் மகன்கள் ஏற்காட்டுக்கு வரவுள்ள நிலையில், முழு விவரம் அவர்களிடம் இருந்து உறுதி செய்யப்படும் என கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.