கரூரில் நடந்த துரதிஷ்டமான விபத்துக்குப் பிறகு, அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுக்கு நேர்முக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க தலைவர் விஜயின் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறி, பிரச்சார அனுமதியில் பாரபட்சம் காட்ட வேண்டாம் என கோரி த.வெ.க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் தொடர்புடைய பல வழக்குகளும் இன்று தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் இணைந்து விசாரிக்கப்பட்டன.
விசாரணையில், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “விதிமுறைகள் உருவாகும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோட் ஷோவுக்கு அனுமதி வழங்கப்படாது” என மதுரை அமர்வில் வழங்கப்பட்ட உத்தரவை நீதிமன்றத்துக்கு எடுத்துக்காட்டினார். விதிகள் உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை, தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் ஆலோசனையும் பெறப்படுகிறது எனவும் விளக்கமளித்தார்.
இதற்கு தலைமை நீதிபதி, “விதிகள் தயார் ஆகும் வரை ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்காதது அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையுமா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு, “பொதுக்கூட்டங்களை நடத்த தடை இல்லை, ரோட் ஷோக்களுக்கு மட்டுமே தற்காலிக கட்டுப்பாடு உள்ளது” என பதிலளித்தது.
இதேவேளை, த.வெ.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தங்களையும் இணைக்க அனுமதிக்குமாறு அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் மனு தாக்கல் செய்தார்.
த.வெ.க சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “விஜய் பிரச்சாரத்துக்கு ஒரு நாள் முன்தான் அனுமதி வழங்கப்பட்டது; முன்கூட்டியே அனுமதி அளித்திருந்தால் கரூரில் நடந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்,” என தெரிவித்தார். மேலும், கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தையும் அரசு பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், “அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாகவே அனுமதி வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் நீதிமன்றமே வழிகாட்டு விதிகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என எச்சரித்தனர்.
அரசு சார்பில் உரிய ஆலோசனைகளுக்கான நேரம் தேவைப்படுவதாக கோரியதை ஏற்று, நீதிமன்றம் 10 நாட்களில் வழிகாட்டு விதிமுறைகளை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் தொடர்ச்சியான விசாரணை நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேசமயம், நெடுஞ்சாலைகளை தவிர்த்து மற்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும், அவற்றை குறித்த காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

















