இந்தியர் ஒருவரைச் சேர்த்து 8 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், இந்தோனேசியாவில் திடீரென மாயமானது. தற்போது ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவின் தெற்கு கலிமண்டன் மாகாணத்தில் உள்ள கொடாபாரு விமான நிலையத்தில் இருந்து, ஈஸ்ட் இந்தோ ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் புறப்பட்டது. கலிமண்டன் மாகாணத்தை நோக்கிச் சென்ற இந்த ஹெலிகாப்டரில் இந்தியரைத் தவிர, அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டு பிரஜைகள் உள்ளிட்ட மொத்தம் 8 பேர் பயணம் செய்தனர்.
வானில் பறந்த 8 நிமிடங்களுக்குள் ஹெலிகாப்டர் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, போர்னியோவின் மண்டேவே வனப்பகுதி அருகே (விமான நிலையத்திலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில்) ஹெலிகாப்டர் மாயமானதாகக் கண்டறியப்பட்டது.
சம்பவ இடம் சுற்றுவட்டாரத்தில் இந்தோனேசிய ராணுவத்தினர் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் உள்ளூர் போலீசாரும் தேடுதலில் பங்கேற்று வருகின்றனர்.