சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை. கடல் சீற்றம் காரணமாக இரண்டாவது நாளாக மீன்பிடிக்க செல்லாத பழையாறு, திருமுல்லை வாசல், பூம்புகார் மீனவர்கள் .சீர்காழியில் மழையினால் உள்ள கழிவு நீர் கால்வாய் தெரியாமல் அதில் இறங்கிய கார் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் புதன்கிழமை நவம்பர் 26 சென்யார் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை,திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி
வட்டத்தில் நேற்று பகல் முழுவதும்விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில், இரவு இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து விட்டுவிட்டு பரவலாக இரவு முழுவதும் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பகலிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
சீர்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், திருவெண்காடு, பழையாறு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மின் கம்பிகளில் தென்னை மட்டைகள் மற்றும் மரக்கிளைகள் ஆங்காங்கே முறிந்து விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு கிராமங்களில் இரவில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டுள்ளனர்.
நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக 2-வது நாளாக பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் மீன் பிடிக்க செல்லும் சுமார் 6000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதேபோல் திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதியை சேர்ந்த மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக படகு அணையும் தளத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

















