அதிமுகவின் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதற்கு எதிர்வினை வெளியிட்டுள்ளார்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில், “அதிமுக ஒன்றுபட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார் செங்கோட்டையன். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்திருந்தார்.
இதனிடையே, திண்டுக்கல்லில் பரப்புரைப் பயணத்திற்காக தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். மேலும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அதன்பின், எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். காரணம் ஏதும் குறிப்பிடப்படாத அந்த உத்தரவின் அடிப்படையில், செங்கோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட செங்கோட்டையன், “தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக அனைவரும் இணைய வேண்டும் என நான் வலியுறுத்தினேன். எனினும், கட்சிப் பதவியைப் பறித்ததில் எனக்கு மகிழ்ச்சி. தர்மம் வெல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

















