தமிழக அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்களுக்காக நடத்தும் சிறப்பு அப்டேட் முகாம் நாளை (அக்டோபர் 11) நடைபெறுகிறது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்திருக்கும் பெண்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெற ரேஷன் கார்டு அவசியம் என்பதால், பலர் தற்போது கார்டு அப்டேட் செய்ய முனைந்துள்ளனர்.
முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிய உறுப்பினரைச் சேர்த்தல், பழைய பெயரை நீக்குதல் போன்ற பணிகள் இம்முகாம்களில் இலவசமாக செய்யலாம். இத்துடன், ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று இம்முகாம்கள் மண்டல வாரியாக நடைபெறுகின்றன. அதன்படி, இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மண்டல உதவி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் உள்ளவர்கள், அல்லது புதுப்பிப்பு செய்ய வேண்டிய குடும்பங்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், முதியோர் மற்றும் உடல் நலக்குறைவால் ரேஷன் கடைக்கு நேரில் வர முடியாதவர்களுக்கு சிறப்பு அங்கீகாரச் சான்று வழங்கப்படுவதால், அவர்களுக்கு இனி நீண்ட நேரம் காத்திருக்கும் சிரமம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.