“தம்பி இன்னும் GST வரல” – ஆன்லைன் ஆர்டர்களை விசாரிக்கும் ஜிஎஸ்டி துறை!

நாடு முழுவதும் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் வழியாக உணவு ஆர்டர் செய்வது இன்று சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த வசதிக்குப் பின்னால் ஒரு முக்கியமான வரி முறைகேடு நடக்கிறதா என்பதைக் கண்டறிய ஜிஎஸ்டி துறை தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

2017 ஜூலை 1ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் படி, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி அரசிடம் செலுத்தப்பட வேண்டும். ஆனால் உணவகங்கள் பேக்கேஜிங் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டியை தவிர்த்து, வரி ஏய்ப்பு செய்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பேக்கேஜிங் கட்டணம்… ஆனால் ஜிஎஸ்டி இல்லை?

உணவு, டெலிவரி, பேக்கேஜிங் – இவை மூன்றுக்கும் நாமே கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், பேக்கேஜிங் கட்டணம் தனியாக காட்டப்பட்டு, அதற்கான ஜிஎஸ்டி அரசிடம் செலுத்தப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் பின்னணி:

யார் செலுத்த வேண்டும்? உணவகமா? செயலிகளா?

இதற்கான தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
உதாரணமாக, நீங்கள் ₹1000-க்கு உணவு ஆர்டர் செய்தால், டெலிவரி, பேக்கேஜிங், ஜிஎஸ்டி உள்ளிட்டவை சேர்ந்து ₹1260 வரை ஆகும். இதில் செயலிகள் (ஸ்விக்கி, சோமேட்டோ) தங்கள் கமிஷனையும், ஜிஎஸ்டியையும் எடுத்து, மீதமுள்ள தொகையை உணவகத்திற்கு அனுப்புகின்றன.

அப்போ அந்த பேக்கேஜிங் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது யார்?
செயலிகளா? உணவகங்களா? – என்ற குழப்பம் நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.

இப்போதைக்கு, ஜிஎஸ்டி துறை பல உணவகங்களுக்கு சம்மன் அனுப்பி, பேக்கேஜிங் கட்டண வரிகளைச் செலுத்தியதற்கான ஆவணங்களை கோரியுள்ளது. உண்மையில் வரி ஏய்ப்பு நடந்ததா என்பதை விரைவில் உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Exit mobile version