ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட 6 சதவீதம் அதிகமாகும்.

ஜிஎஸ்டி 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி, முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் குறித்து மத்திய அரசு அறிவித்து வருகிறது.

இதனிடையே, சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது நான்கு அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி விகிதங்கள், விரைவில் இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட உள்ளன என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.86 லட்சம் கோடி வருவாய் வசூலாகி இருப்பது, வரி வசூலில் நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.

Exit mobile version