சென்னை: “அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும்” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகப் பேசியுள்ளார்.
“தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது. யாருடனும் இணையவில்லை. திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர். இங்கு மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.
இந்நிலையில், இன்று ஈரோட்டில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “தமிழர்களை தேசவிரோதிகள் என சித்தரித்து ஆளுநர் ரவி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து பேசுகிறார். அவர் வகிக்கும் அரசியல் சாசன பதவிக்கு, துளியும் பொருத்தமற்ற தரக்குறைவான பேச்சு இது. எங்க பசங்க உலக வாய்ப்புகளுக்காக ஆங்கில மொழியை படிக்கிறாங்க. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு எங்க எரியுது?” என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும்.ஒன்றிய பாஜக ஆட்சியில் தான் பஹல்காம் தாக்குதல், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத அரசை ஆளுநர் புகழ்கிறார்” என விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது. தமிழகத்திற்கான திட்டங்கள் நிராகரிக்கும் போது மட்டும் மத்திய அரசு கம்பி கட்டும் கதை சொல்கிறது. ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும் புதிய ரெயில்பாதை திட்டங்கள் குறித்த கோரிக்கையை முன்வைப்பேன். தி.மு.க. அரசு எதைக்கேட்டாலும் தரக்கூடாது என மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துவிட்டது. வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு, நிதி ஒதுக்கும்போது பட்டை நாமம் போடுகிறது பா.ஜ.க. SIR மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ளுங்கள் அதுதான் மிகவும் முக்கியம்” எனக் கூறியுள்ளார்.
















