திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் பகுதியில் 10 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் இதுவரை குற்றவாளியை கைது செய்யாததை கடுமையாக கண்டித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருகிலுள்ள பாட்டி வீட்டிற்குத் தனியாக நடந்து சென்ற சிறுமி, மனச்சான்றற்ற கொடூரனால் கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு ஆளானது மனிதக்குலத்தையே தலைகுனியச் செய்கிறது. இது அரசும், ஒட்டுமொத்த சமூகமும் வெட்கம் கொள்ள வேண்டிய ஒரு பேரவலமாகும்” எனக் கூறியுள்ளார்.
கொடுமை நேர்ந்த சிறுமியின் தாயின் கதறலும், அதே வழியில் வந்த மற்றொரு சிறுமியை “அந்தப்பக்கம் போகாதே” எனத் தடுக்க முயன்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் விழிப்புணர்வும் இதயத்தை நெகிழச் செய்கிறது எனவும் அவர் கூறினார்.
சிசிடிவி காணொளிகளில் குற்றவாளியின் செயல் பதிவாகியிருந்தும், சிறுமி தனது வாக்குமூலத்தில் அவர் இந்தி மொழியில் பேசினார் எனத் தெரிவித்திருந்தும், இதுவரை கைது செய்யப்படாதது அதிர்ச்சிக்குரியது எனக் குறிப்பிட்டார்.
“திமுக அரசின் அலட்சியமான நிர்வாகமே, இந்த வன்கொடுமையை விடவும் மிகப்பெரிய வன்கொடுமை” என கூறிய அவர், வட மாநிலத்தவரின் வருகையை முறையாகக் கண்காணிக்காத அரசின் தவறும், தமிழகத்தில் நடைபெறும் சமூகக்குற்றங்களுக்கு முக்கியக் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
அத்துடன், குற்றவாளியை உடனடியாக கைது செய்து, மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தினார்