தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அரசுத் துறைகள் செயலிழந்துவிட்டதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது:
முதியோர்கள் மீதான குற்றங்கள்: தேசிய குற்றப்பதிவுத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவின்படி, 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 201 முதியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது நாட்டில் அதிக எண்ணிக்கையாகும். மேலும், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் 2,104 ஆக பதிவாகி, நாடு முழுவதும் தமிழகத்திற்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள்: 2020 ஆம் ஆண்டில் 1,294 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2023 இல் அது 1,921 ஆக உயர்ந்துள்ளது. இது திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குழந்தைகள் மீதான குற்றங்கள்: திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவில் உயர்ந்துள்ளன.
அண்ணாமலை மேலும் தெரிவித்ததாவது, “தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறை எதிர்க்கட்சியினரை குறிவைத்து வழக்குகள் பதிவு செய்வதிலும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதிலும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. காவல்துறையையும், அரசு உயர் அதிகாரிகளையும் திமுக நிர்வாகிகள் போல ஆளப்படுத்தி விடப்பட்டுள்ளது. இதன் விளைவாக சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது. ஆட்சி காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதமே உள்ளது; தமிழக மக்கள் திமுகவின் அராஜகத்துக்கு முடிவுரை எழுதுவார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
















