உயிர்ப்பலிகளைத் தடுக்க அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் அதிரடி உறுதிமொழி  புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு!

கடந்த வாரம் கடலூர் பகுதியில் அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, எதிர்பாராத விதமாகக் கார்கள் மீது மோதிய கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க மாநிலம் தழுவிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசுப் போக்குவரத்துப் கழக மேலாண் இயக்குநரின் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் கூடலூர் மண்டலங்களில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ஊட்டி மண்டல பொது மேலாளர் ஜெய்சங்கர் மற்றும் துணை மேலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஓட்டுநர்களுக்குப் பல்வேறு கடுமையான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, “வாகனம் ஓட்டும்போது எக்காரணம் கொண்டும் மொபைல் போன் பேசக்கூடாது; புளூடூத் அல்லது ஹெட்-செட் மூலம் பாடல்கள் கேட்பதையோ, பேசுவதையோ முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், பேருந்து இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏதேனும் இயந்திரக் கோளாறு தென்பட்டால், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாகப் பேருந்தை நிறுத்திவிட்டு கிளை அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், உடல்நலக் குறைவு அல்லது தூக்கக் கலக்கம் இருந்தால் அத்துடனே பேருந்தை இயக்கக் கூடாது என்றும் ஓட்டுநர் பயிற்றுநர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தின் நிறைவாக, ஊட்டி மற்றும் கூடலூர் போக்குவரத்துப் பணிமனைகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள், “பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மையாகக் கொண்டு, எவ்வித விதிமீறல்களும் இன்றி பாதுகாப்பாகப் பேருந்தை இயக்குவேன்” என்று மனப்பூர்வமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பேருந்து பயணத்தின்போது ஓட்டுநர்கள் மொபைல் போன் அல்லது இதர மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கண்டால், பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்க ஏதுவாக ஊட்டி (94439 01453), கோவை (94425 01920), திருப்பூர் (94425 69210) மற்றும் ஈரோடு (94439 01451) ஆகிய மண்டலங்களுக்கான பிரத்யேகப் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாலைப் பாதுகாப்பு என்பது ஓட்டுநர்களின் கைகளில் மட்டுமே இல்லை, அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பிலும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

Exit mobile version