சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் சிந்தாதிரிப்பேட்டை – சென்னை கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை (MRTS), நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் மார்ச் 7-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. (SRMU) பொதுச்செயலாளர் என். கண்ணையா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரலில் உள்ள மஸ்தூர் யூனியன் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரயில்வே நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு முக்கிய முடிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் எதிர்கொண்டு வரும் சிரமங்களைக் களைவதற்குத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் தற்காலிக ‘ஷட்டில் மின்சார ரயில் சேவைகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களுடன் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு, இன்று முதல் 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது புறநகர் ரயில் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
பறக்கும் ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை, பரங்கிமலை மற்றும் சென்னை கடற்கரை இடையேயான புதிய வழித்தடத்தில் வரும் மார்ச் 5-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) இறுதி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 7-ஆம் தேதி முதல் முழுமையான ரயில் போக்குவரத்துத் தொடங்கும். அதேபோல், எழும்பூர் ரயில் நிலையத்தின் 10-வது நடைமேடைப் பணிகளை அடுத்த 20 முதல் 22 நாட்களுக்குள் முடித்து, ரயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே சமயம், ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகள் குறித்தும் கண்ணையா கவலை தெரிவித்தார். தெற்கு ரயில்வேக்கு இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.16,000 கோடி பட்ஜெட்டில், மத்திய அரசு வெறும் ரூ.13,200 கோடி மட்டுமே வழங்கியுள்ளதால், தொழிலாளர்களின் பயணப்படி மற்றும் கூடுதல் பணிநேரப்படி உள்ளிட்ட சலுகைகள் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சாடினார். ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளையும், பாதுகாப்பு சார்ந்த முக்கியப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதையும் யூனியன் ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரித்த அவர், இதற்காகத் முதற்கட்டப் போராட்டங்கள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

















