ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு ; ஒரு சவரன் ரூ.99,520 !

சென்னை: சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தின் கிராம் விலை ரூ.40 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,440 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது. நேற்று முன்தினம் (டிசம்பர் 16) ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.12,350க்கும், ஒரு சவரன் ரூ.98,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்போது வெள்ளி கிராம் ரூ.211 என்ற விலையில் இருந்தது.

நேற்று (டிசம்பர் 17) தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.12,400 ஆகவும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.99,200 ஆகவும் விற்பனையானது. அதே நேரத்தில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ரூ.222 என்ற உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் வெள்ளி கிலோ விலை ரூ.11,000 உயர்ந்து, ரூ.2.22 லட்சமாக உயர்ந்தது.

இந்த நிலையில், இன்று தங்க விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.224க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ விலையில் ரூ.2,000 உயர்வுடன், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.24 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

வெள்ளி பயன்பாடு அதிகரித்து வருவதும், அதில் முதலீடுகள் குவிந்து வருவதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version