இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்றம் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இன்று நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.90,400 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, அமெரிக்க டாலரின் வலிமை, மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பிழப்பு ஆகியவை தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதன் விளைவாக பல நாடுகள், குறிப்பாக மத்திய வங்கிகள், அமெரிக்க டாலர் கையிருப்பை குறைத்து தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
ஆண்டின் தொடக்கத்தில் ரூ.60,000 இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, தற்போது ரூ.90,000-ஐ கடந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டுக்குள் ரூ.30,000 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.167 என நிலைத்திருக்கிறது.
புதிய தலைமுறையிடம் பேசிய தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்ததாவது:
“சர்வதேச அளவில் பல நாடுகள் தங்கத்தைப் பெருமளவில் வாங்கி முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக பல மத்திய வங்கிகள் தங்களிடம் உள்ள டாலர் கையிருப்பை தங்கமாக மாற்றி வருகின்றன. இதுவே தங்கத்தின் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. தற்போதைய போக்கு தொடர்ந்தால், இந்த ஆண்டுக்குள்ளாகவே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுவிடும் வாய்ப்பு அதிகம்.”
நிதி வல்லுநர்களும் இதையே உறுதிப்படுத்துகின்றனர். அவர்கள் கூறுவதாவது, “பணவீக்கம் மேலும் அதிகரித்தாலோ அல்லது உலகளாவிய அரசியல், பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்தாலோ, தங்கத்தின் விலை அடுத்த வருடத்திற்குள் ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளது” என்கிறனர்.