கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வில் காணப்பட்ட தங்கம் விலை இன்று மேலும் சரிந்துள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.11,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரங்கள் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தங்க விலை சமீபத்தில் உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து குறைவை சந்தித்து வருகிறது.
அக்.21ஆம் தேதி சவரன் ரூ.96,000க்கும், கிராம் ரூ.12,000க்கும் விற்பனையாகிய நிலையில், நேற்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.300 சரிந்து ரூ.11,700 ஆகவும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.93,600 ஆகவும் விற்பனையானது.
அதேநாள் மாலை மீண்டும் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.11,540க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.92,320க்கும் விற்பனையானது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்க விலை சவரனுக்கு மொத்தம் ரூ.3,680 சரிவடைந்தது.
இன்று மேலும் ரூ.320 குறைந்துள்ளதால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்க விலை சவரனுக்கு ரூ.4,000 சரிந்துள்ளது. இதனால் நகை வாங்க விரும்பும் மக்களுக்கு சற்று ஆறுதல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வெள்ளி விலையும் சிறிய அளவில் குறைந்துள்ளது. தற்போது வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.174க்கு விற்பனை செய்யப்படுகிறது.

















