சென்னை: ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது, தீர்ப்புக் கேட்டதும் 15 வயது சிறுமி நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலின்படி, அந்த சிறுமியின் தாய் அந்தமான் பகுதியைச் சேர்ந்தவர்; தந்தை சென்னை நீலாங்கரையைச் சேர்ந்தவர். தாய் மறுமணம் செய்து கொண்டதால், சிறுமியை தந்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவின் விசாரணையில், நீதிமன்றம் சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பால் மனமுடைந்த சிறுமி, திடீரென நீதிமன்றத்தின் முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அங்கு இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் இருந்தாலும், சிறுமி உயிர் தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழக காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.