காசாவில் நடைபெற்று வரும் வன்முறைகள் இனப்படுகொலையாகும் என்று சமீபத்தில் ஐ.நா. அறிவித்திருந்தது. இதன் பின்னணியில், அந்த துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தனது சமூக வலைதளப் பதிவில் அவர், “காசா தற்போது மூச்சுத் திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அங்கு அப்பாவி மக்கள் படும் துயரத்தை உலகம் புறக்கணிக்கக் கூடாது. குழந்தைகளின் அழுகை, பட்டினியால் வாடும் மக்கள், மருத்துவமனைகள் மீது நடக்கும் தாக்குதல் – இவை அனைத்தும் எந்த மனிதனும் தாங்க முடியாத துயரத்தை காட்டுகின்றன. ஐ.நா. விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள இனப்படுகொலை குறிப்பு, அந்த நிலைமைக்கு சாட்சியமாக உள்ளது.
இத்தகைய சூழலில் அமைதியாக இருப்பது கூடாது. ஒவ்வொருவரின் மனசாட்சி விழித்தெழ வேண்டும். இந்தியா உறுதியான குரலில் பேச வேண்டும். உலக நாடுகள் ஒன்றுபட்டு, இந்த கோரமான நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.