தமிழகத்தில் தள்ளுவண்டிகளில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து வணிகர்களும் கட்டாயமாக FSSAI உரிமம் பெற வேண்டும் என மாநில உணவுப் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்ட ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளை வழங்கும் தள்ளுவண்டி கடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல எனத் துறை தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பிற்கு தேவையான தரநிலைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
FSSAI சான்றிதழ் இல்லாமல் செயல்படும் கடைகளுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுமக்கள் சுலபமாக உரிமம் பெற்றுக் கொள்ள, ஆன்லைனிலும் இ-சேவை மையங்களிலும் இலவசமாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிமம் பெற்றுள்ளனரா என்பதை சரிபார்க்க மாவட்ட மட்டத்தில் ஆய்வுகள் நடத்த அதிகாரிகளுக்கு புதிய பணிக்குறிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தள்ளுவண்டி கடைகளின் உணவு பாதுகாப்பு நிலையை கண்காணிக்க விரைவில் சிறப்பு ஆய்வுகள் நடைபெற உள்ளன.



















