மதுரை மாநகராட்சியின் சார்பில் தூங்காநகர மக்களின் நீண்டநாள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நாகனாகுளம் கண்மாய் அருகே நாராயணபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகத் தகன சேவைகளை வழங்கும் உயரிய நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நவீன மயானத்தின் முழுமையான பராமரிப்பு மற்றும் இயக்கப் பொறுப்பினை, சமூக நலப் பணிகளில் முன்னோடியாகத் திகழும் ஈஷா அறக்கட்டளையிடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2010-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மயானங்களை மிகத் தூய்மையாகவும், கண்ணியமான முறையிலும் பராமரித்து வரும் ஈஷா அறக்கட்டளை, தற்போது மதுரையிலும் தனது சேவையைத் விரிவாக்கியுள்ளது பொதுமக்களிடையே பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
நியூ நத்தம் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த எரிவாயு மயானம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை எவ்விதத் தடையுமின்றி அமைதியான சூழலில் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. ஈஷா தன்னார்வலர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் வகையில், இந்த மையம் குருபூஜையுடன் தனது சேவையைத் தொடங்கியுள்ளது. நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக எளிய மக்கள் தங்களின் இறுதிச் சடங்குகளைச் சிரமமின்றிச் செய்ய வேண்டும் என்ற இலக்கோடும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் இந்த மக்கள் நல முன்னெடுப்பும், ஈஷா அறக்கட்டளையின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையும் இணைந்து, நாகனாகுளம் மயானத்தை ஒரு முன்மாதிரி மையமாக மாற்றியுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
















