ரஷ்ய ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக வெளிவரும் விளம்பரங்கள் மற்றும் ஆள் சேர்ப்பு முயற்சிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் போரின் போது, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் ஏமாற்றப்பட்டு பல இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக ஏற்கனவே வெளிச்சமிட்டது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
சமீபத்தில், கட்டுமானத் தொழில் வாய்ப்பு தருவதாக நம்ப வைத்து இந்தியாவைச் சேர்ந்த இருவர் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களுடன் சேர்த்து சுமார் 13 இந்தியர்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைமையைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
“ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கிடைக்கும் தகவல்கள் எங்களது கவனத்திற்கு வந்துள்ளன. இதுபோன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும் எனவும் ரஷ்ய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். ரஷ்ய ராணுவ வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்துகிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
