கொடைக்கானல் அண்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 42 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்கள் கல்லூரி கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் ஒன்றுகூடி உற்சாகத்துடன் கொண்டாடினர். 1983 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை கொடைக்கானல் வில்பட்டி பிரிவுக்கு அருகில் அமைந்திருந்த அண்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். கல்லூரி தற்போது அங்கு இல்லாவிட்டாலும், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் சுமார் 50 பேர் ஒரே மாதிரியான சீருடையை அணிந்து ஒன்று கூடினர். முன்னாள் மாணவர்கள் தங்களுக்குக் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த ஒழுக்கம், கல்வி மற்றும் நன்னடத்தை ஆகியவற்றின் காரணமாகவே தற்போது வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பதாக அவர்கள் பெருமையுடன் தெரிவித்தனர். கல்லூரியில் படித்தபோது நடந்த சுவாரஸ்யமான நினைவுகள் மற்றும் தங்களது தற்போதைய வாழ்க்கை முறைகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர். இந்தச் சந்திப்பின் சிறப்பு என்னவென்றால், இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் அந்தமான் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும், சவுதி அரேபியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தங்கள் சக மாணவர்களில் சிலர் உலகை விட்டு மறைந்துவிட்டாலும், இந்தச் சந்திப்பின்போது அவர்களுக்குச் சிறப்பாக நினைவஞ்சலி செலுத்தி, அவர்களையும் நினைவு கூர்ந்ததாக மாணவர்கள் கண்கலங்கிய நிலையில் தெரிவித்தனர். நீங்கா நினைவுகளை சுமந்து நடைபெற்ற இந்தச் சந்திப்பு இனி வரும் ஆண்டுகளிலும் தவறாமல் வருடாந்திர நிகழ்வாக நடைபெறும் என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துக் கொண்டனர்.
















