டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 3 வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களில் பரபரப்பும், பலர் உயிரிழந்ததும் ஏற்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். புதிய அரசு ஆட்சி தொடங்கிய பின்னர், அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டது.
டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அப்துல்லா அல் மம், 3 வழக்குகளிலும் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்து, ஒவ்வொரு வழக்கிற்கும் 7 ஆண்டு சிறை விதித்து மொத்தம் 21 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், அவரது மகன் சஜீப் வாகீத்துக்கும் மற்றும் மகள் சயிமா வாஜீத்துக்கும் ஒவ்வொருவருக்கும் 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
அடுத்தடுத்த வழக்குகளில், அவர் ஊழல் செய்துள்ளதாகவும், அரசு நிலங்களை குடும்ப உறுப்பினர்களுக்காக விதிமுறைகளை மீறி ஒதுக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
















