சிறுவனுக்கு பாலியல் தொல்லை 65 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு, 6 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், நமச்சிவாயம் (65) என்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகக் காவல்துறை காட்டும் உறுதிப்பாட்டிற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அப்போதைய இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி தலைமையிலான தனிப்படையினர், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைத் திரட்டி குற்றவாளியைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, நமச்சிவாயம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அரசு தரப்பில் 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தரத் திறம்பட வாதிட்டார்.

இந்த வெற்றிகரமான தண்டனை பெற்றுத் தந்ததற்காக, ஏ.டி.எஸ்.பி. சண்முகம், டி.எஸ்.பி. கணேஷ்குமார், தற்போதைய இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் வழக்கை முதலில் புலன் விசாரணை செய்த பாமா பத்மினி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 28 போக்சோ வழக்குகளில் 29 நபர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு முக்கிய போக்சோ வழக்குகளில் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையும், தற்போதைய வழக்கில் ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது. இது குறித்து எஸ்.பி. பிரசண்ணகுமார் கூறுகையில், “பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே மாவட்ட காவல்துறையின் முதன்மை நோக்கம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்விதத் தயக்கமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version