உலக அளவில் அச்சுறுத்தி வரும் வாழ்வியல் நோய்களில் சர்க்கரை நோய் முதன்மையானதாக உள்ளது. இந்நோய் குறித்த பொதுவான புரிதல் மக்களிடையே இருந்தாலும், அதன் தீவிரமான பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். சர்க்கரை நோயால் உடலில் ஏற்படும் மிக முக்கிய பாதிப்பு ரத்தக் குழாய் அடைப்பு ஆகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை முறையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறினால், காலப்போக்கில் ரத்தக் குழாய்கள் சிதைவடைந்து, முக்கிய உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் எந்நேரமும் ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்க்கரை நோயாளிகளின் உடலில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு பாதங்கள் மற்றும் கால் விரல்கள் ஆகும். ரத்த ஓட்டம் குறையும்போது பாதங்களில் ஏற்படும் சிறிய வீக்கம் அல்லது காயம் கூட ஆறாமல் புண்ணாக மாறிவிடும். இது குறித்து விருதுநகரைச் சேர்ந்த பிரபல நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் ஜீ.தீபன் கூறுகையில், “தினமும் நமது முகத்தை எத்தனை முறை கண்ணாடியில் பார்க்கிறோமோ, அதுபோலவே சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களையும் அடிக்கடி கூர்ந்து கவனிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்று வந்த பிறகு, பாதங்களில் ஏதேனும் அடிபட்டுள்ளதா, நிறமாற்றம் அல்லது வித்தியாசம் தெரிகிறதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம். கால்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே உயிரைக் காக்கும்” என்று அறிவுறுத்துகிறார்.
பாதங்களில் லேசான சிவந்த நிறம் அல்லது வீக்கம் தென்பட்டாலும் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில், கிருமித் தொற்று (Infection) வேகமாக உடல் முழுவதும் பரவி, ரத்தக் குழாய்களை முழுமையாக அடைத்துவிடும். இத்தகைய பாதிப்பு உச்சமடையும் போது, கால் விரல்கள் அழுகி (Gangrene), அவற்றைத் அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் ஏற்படும். “என்னிட சிகிச்சைக்கு வரும் ஒவ்வொரு 30 நோயாளிகளில் 15 பேர் காலில் ஆறாத புண்களுடன் வருகின்றனர். அவர்களில் குறைந்தது 5 பேருக்காவது விரல்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது” என டாக்டர் தீபன் வேதனையுடன் குறிப்பிடுகிறார்.
சர்க்கரை நோய் என்பது பயப்பட வேண்டிய ஒன்றல்ல, மாறாகப் பராமரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். முறையான உணவுக்கட்டுப்பாடு, அன்றாட உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொண்டு சர்க்கரை அளவைச் சீராக வைத்திருந்தால், எவ்வித உறுப்பு இழப்பும் இன்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். ஆரம்பக்கால விழிப்புணர்வே பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் அரணாகும்.

















