கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் பொதுவெளி நிகழ்ச்சி : புதுவை போலீசாரிடம் தவெக மனு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்புக்கு தயாராகிறார். வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் ரோடு ஷோ நடத்த அனுமதி பெற்றுத் தரும்படி தவெக நிர்வாகிகள் புதுவை போலீசாரிடம் மனு அளித்துள்ளனர். கரூர் விபத்திற்குப் பிறகு பொதுவெளியில் விஜய் நேரடியாக பங்கேற்க இருக்கும் இது முதல் நிகழ்ச்சி என்பதால், தவெக நிர்வாகிகள் பெரும் வரவேற்பு ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தனது பொதுப் பிரசாரங்களை நிறுத்தி வைத்திருந்தார். சுமார் ஒரு மாதம் கழித்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், நிகழ்வுகளை மெதுவாகத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களால் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, கூட்டநெரிசலை திறம்பட கட்டுப்படுத்த ‘மக்கள் பாதுகாப்பு படை’ என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, தொண்டர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. சேலத்தில் நடத்த திட்டமிட்ட மக்கள் சந்திப்பு அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழகத்திற்கு வெளியே பிரசாரத்தை தொடங்க முனைந்துள்ளது தவெக.

சமீபத்தில் காஞ்சீபுரம் அருகே நடைபெற்ற உள்ளக கூட்டத்தில், விரைவில் மக்கள் சந்திப்பு தொடங்கும் என விஜய் தெரிவித்திருந்தார். அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ள நிலையில், புதுவையில் ரோடு ஷோ நடத்துவது தவெக திட்டமாகியுள்ளது.

காலாப்பட்டியில் தொடங்கி கன்னியாக்கோவில் வரை நீளும் இந்த ரோடு ஷோவில், புதுச்சேரி சோனாம்பாளையத்தில் பொதுமக்கள் முன்பு விஜய் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெற அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் சொந்த ஊரில் தொடங்கப்படுவதால், நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்படும் என்று நிர்வாகிகள் நம்புகின்றனர்.

கரூர் துயரத்திற்குப் பிறகு மீண்டும் பொதுவெளியில் விஜய் நேரடியாக மக்கள் சந்திப்பில் பங்கேற்கும் இந்த ரோடு ஷோ, தவெக அரசியல் பயணத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version