பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள பிளாஸ்டிக் பாய் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பெங்களூரு கேர் ஆர் மார்க்கெட் அருகே, நாகர்தாபேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் தரை பாய் உற்பத்தி பிரிவில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பேர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுவதால், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ராஜஸ்தானைச் சேர்ந்த மதன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தொழிற்சாலையின் மேல் தளத்தில் வசித்து வந்ததாகவும், அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஹலசூரு கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.