அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் தீ விபத்து !

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகக் கட்டிடத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 108 எண்ணுக்கு பொதுமக்கள் அழைப்பு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் உள்ள சர்வர் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக, அவசர அழைப்புகளை கையாள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் 7 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசர அழைப்புகள், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படுகின்றன. பொதுமக்கள் எந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவன சிம் பயன்படுத்தினாலும், 108 எண்ணுக்கு அழைப்பு மேற்கொள்ளும் போது அந்த அழைப்பு பிஎஸ்என்எல் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற வலையமைப்பு வழியாகத்தான் கட்டுப்பாட்டு மையத்தை சென்றடைகிறது.

சென்னையில் மட்டும் சுமார் 70-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்சுகள் இந்த நெட்வொர்க்கை நம்பியே செயல்பட்டு வருகின்றன. எனவே, அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து, நகரம் முழுவதும் 108 அவசர மருத்துவ சேவையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், தீ விபத்து காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைய சேவையும் நெட்வொர்க் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தும் பலரும் இந்த திடீர் சேவை முடக்கத்தால் சிரமம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தாமதமாக அறிமுகப்படுத்தியதாகவும், அதன் வேகம் திருப்திகரமாக இல்லை என்றும் பயனாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்ட இந்த சேவை பாதிப்பு பொதுமக்கள் மத்தியில் கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version