சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல், சளி, வறட்டு இருமல் அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழையால் மாறிவரும் வெப்பநிலை இதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சலால் உடல் சோர்வு, மாலை நேர குளிர், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் அதிகரித்து, குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் பெருகியுள்ளது.
“தற்போது பரவி வரும் காய்ச்சல்களில் சுமார் 70% இன்ஃப்ளூயன்ஸா வகை காய்ச்சலாக இருக்கலாம்,” என பொதுச் சுகாதார நிபுணர் குழந்தைசாமி விளக்கமளித்துள்ளார். மேலும், மழைநீர் தேங்கி இருப்பதால் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து, டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், காய்ச்சலைத் தடுக்கும் வகையில் மக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீரைகள், பழங்கள், காய்கறிகள் உண்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை பின்பற்றுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.