மும்பை: ஃபெடரல் வங்கி 2025-ஆம் ஆண்டு ஜூன் காலாண்டுக்கான நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், வங்கிக்கு ரூ.861.75 கோடி நிகர லாபம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவான ரூ.1,009.53 கோடியுடன் ஒப்பிட்டால் 14.6% குறைவாகும்.
இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கே.வி.எஸ். மணியன் கூறுகையில், “இந்த காலாண்டு எங்கள் பன்முகமான வணிக மாதிரியின் வலிமையை மீண்டும் நிரூபித்தது. நடுத்தர மகசூல் தரும் பிரிவுகள் நல்ல வளர்ச்சியைக் காட்டியுள்ளன. உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. கட்டண வருமானம் சாதனை நிலையை எட்டியுள்ளது,” என்றார்.
நிகர வட்டி வருமானம் (NII) & மொத்த வருமானம் :
ஜூன் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) 2% உயர்ந்து ரூ.2,291.98 கோடியை எட்டியுள்ளது. மொத்த வருமானம் ரூ.7,799.61 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 21.6% அதிகமாகும்.
வைப்புத்தொகை மற்றும் கடன்கள் :
முதல்காலாண்டில் வங்கியின் மொத்த வைப்புத்தொகை 8.03% அதிகரித்து ரூ.2.87 லட்சம் கோடியாகவும், நிகர முன்பணங்கள் 9.24% உயர்ந்து ரூ.2.41 லட்சம் கோடியாகவும் உள்ளன. இதில்,
சில்லறை முன்பணங்கள் – 15.6% உயர்வு (₹81,047 கோடி)
வணிக வங்கி கடன்கள் – 30.3% உயர்வு (₹25,028 கோடி)
பெருநிறுவன கடன்கள் – 4.5% உயர்வு (₹83,680 கோடி)
CASA அடிப்படை மற்றும் வருவாய் :
வங்கியின் CASA (Current Account Savings Account) அடிப்படை ஆண்டுக்கு 12% உயர்ந்து ரூ.87,236 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 2.94% ஆகவும், ஒரு பங்கிற்கான வருடாந்திர வருவாய் ரூ.14.07 ஆகவும் பதிவாகியுள்ளது.
செயலிழந்த கடன்கள் (NPA) :
வங்கியின் மொத்த செயலிழந்த கடன்கள் (Gross NPA) 1.91% ஆகவும், நிகர NPA 0.48% ஆகவும் குறைந்துள்ளது. வழங்கல் பாதுகாப்பு விகிதம் 74.41% ஆக உள்ளது, இது வங்கியின் மோசமான கடன்களை எதிர்கொள்ளும் திறனை குறிக்கிறது.