மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் குறுக்கே வீரசோழன் ஆறு செல்வதால் ஆற்றின் குறுக்கே 1997 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த பாலம் மிகவும் சிதலமடைந்து காணப்படுவதால் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும் எனவும், எரவாஞ்சேரியில் இருந்து திருவிளையாட்டம், தில்லையாடி இணைப்பு சாலை வரை சாலை மிகவும் சிதலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் அதனை சரி செய்ய வேண்டும் எனவும், எரவாஞ்சேரி கிராமத்தில் பழுதடைந்துள்ள நுகர் பொருள் அங்காடி கட்டிடத்தை புதிதாக கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி மற்றும் மஞ்சுளா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூடுதல் ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாலை மற்றும் பாலத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது

















