முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், கற்கோயில் நெல் கொள்முதல் நிலையத்தில் 2500 நெல் மூட்டைகள் தேக்கம், 100 ஏக்கரில் அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே உதிரும் முற்றிய நெல்மணிகள், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தானடி நெல் சாகுபடி செய்யப்பட்டது. விளைந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 180 க்கு மேற்பட்ட இடங்களில் திறக்கப்பட்டது. தற்பொழுது பெரும்பாலான இடங்களில் அறுவடை நிறைவடைந்த நிலையில், மழையால் அழிந்த பயிர்களை மீண்டும் நட்ட காரணத்தால் பல்வேறு இடங்களில் தாமதமாக அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால் அதிகாரிகள் தாமதமான அறுவடை நெல்லை கணக்கில் கொள்ளாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டாலும் விவசாயிகள் மூட்டைகளுடன் காத்திருக்கின்றனர். சீர்காழி அருகே கற்கோயில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் நிறுத்தப்பட்ட காரணத்தால், கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து .நெல்லை விற்பனை செய்வதற்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 2500 நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. வெட்ட வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் எடை குறைவு போன்ற பிரச்சனைகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் சுமார் 100 ஏக்கர் வரையில் அறுவடை செய்யாமல் முற்றிய நெல்மணிகள் வயலிலேயே காய்ந்து விழும் நிலை உள்ளது. உடனடியாக நெல்லை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version