கோவை வடக்கு மற்றும் புறநகர் மாவட்ட மலையோரக் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தடாகம், பன்னீர்மடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள் மற்றும் காட்டு மாடுகளின் ஊடுருவலால் விளைநிலங்கள் போர்க்களம் போலக் காட்சியளிக்கின்றன. தற்போது இப்பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி சீசன் என்பதால், அதன் வாசனை மற்றும் சுவைக்கு ஈர்க்கப்பட்டு இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள், பயிர்களை வேரோடு கிளறியும் மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன. இதனால் பன்னீர்மடை உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள ஏக்கர் கணக்கிலான கொண்டைக்கடலை வயல்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்து வருகின்றன.
வனத்துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டாலும், அனைத்து விளைநிலங்களையும் ஒரே நேரத்தில் கண்காணிப்பது சவாலாக உள்ளது. இந்நிலையில், பெரும் நஷ்டத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளப் பன்னீர்மடை பகுதி விவசாயிகள் ஒரு எளிய மற்றும் நூதனமான தற்காப்பு முறையைக் கையாண்டு வருகின்றனர். கொண்டைக்கடலை பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளில் ஆங்காங்கே நீண்ட குச்சிகளை நட்டு, அதன் நுனியில் பெரிய அளவிலான வெள்ளை நிற பிளாஸ்டிக் காகிதங்களை கட்டித் தொங்கவிட்டுள்ளனர். காற்று வீசும்போது இந்த வெள்ளை காகிதங்கள் அசைந்து ஒருவித சத்தத்தையும், பிரதிபலிப்பையும் ஏற்படுத்துகின்றன. இரவு நேரங்களில் நிலவொளியில் இந்த அசைவைப் பார்க்கும் காட்டுப்பன்றிகள், மனித நடமாட்டம் இருப்பதாகக் கருதி வயல்களுக்குள் நுழைய அஞ்சி ஓடிவிடுகின்றன.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “எங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை வனவிலங்குகளிடமிருந்து காக்கப் போராடி வருகிறோம். கொண்டைக்கடலையைத் தேடி வரும் பன்றிக் கூட்டத்தைத் தடுக்க இந்த வெள்ளை காகித முறை எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் இந்த முறையினால், கடந்த சில நாட்களாகப் பன்றிகளின் ஊடுருவல் பெருமளவு குறைந்து பயிர்கள் ஓரளவு தப்பித்துள்ளன” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இருப்பினும், இது தற்காலிகமான தீர்வே என்பதால், மலையோர கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனப்பகுதியை ஒட்டி நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை அமைக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
