தேனி கலெக்டர் அலுவலகத்தில் முல்லைப்பெரியாறு அணை நிர்வாகத்தில் முறைகேடு என விவசாயிகள் பகிரங்கப் புகார்!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ராஜகுமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கவிதா, கலால் உதவி ஆணையர் பஞ்சாபகேசன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை மனுக்களாக அளித்தனர். இதில் முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு, இளைஞர்களுக்கான விளையாட்டு வசதிகள் மற்றும் தனியார் நிதி நிறுவன மோசடி உள்ளிட்ட விவகாரங்கள் முதன்மையாக எதிரொலித்தன.

முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மனோகரன் அளித்த மனுவில், அணை நிர்வாகத்தில் நிலவும் குளறுபடிகள் குறித்துப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அணையில் தங்கிப் பணியாற்ற வேண்டிய செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் அங்கு தங்குவதில்லை என்றும், அரசு வாகனங்களைத் தங்களது சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்திவிட்டு அதற்கான எரிபொருள் செலவை அணை பராமரிப்பு நிதியிலிருந்து கையாடல் செய்வதாகவும் புகார் கூறினார். மேலும், கம்பத்தில் உள்ள அரசு குடியிருப்பைக் குறைந்த வாடகையில் முறைகேடாகப் பயன்படுத்தி வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதிகாரிகளின் கெடுபிடியால் தகுதியான பணியாளர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வதாகவும் அவர் சாடினார். எனவே, அணை நிர்வாகத்தைச் சீர்படுத்தி, அதனை முழுமையாகத் தேனி மாவட்ட நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, வருஷநாடு ஊராட்சியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் தலைமையிலான இளைஞர்கள், தங்கள் பகுதியில் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதைத் தடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் போதிய விளையாட்டு மைதான வசதிகள் இல்லை என்று முறையிட்டனர். சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறவும், கபடி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவும் முறையான மைதானம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், போடியில் தனியார் அடகு கடையில் நகை வைத்துப் பாதிக்கப்பட்ட சங்கத் தலைவர் சந்திரா தலைமையிலான பெண்கள், 2012-இல் அடகு வைத்த நகைகளை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர் நகைகளைத் தங்களுக்குத் தெரியாமல் மறு அடகு வைத்து மோசடி செய்துள்ளதாகவும், காவல்துறை விசாரணைக்குப் பின்னரும் தங்களுக்கு நகைகள் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

கூட்டத்தின் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் வழக்குத் தொடர்பான உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பைக் கண்டித்து நாட்டுமாடு நலச்சங்க நிர்வாகி கலைவாணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட கலைவாணன் உள்ளிட்ட 13 பேரை தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஒரே நாளில் பல்வேறு தரப்பு கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நாள் முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

Exit mobile version