மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படாததால் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஒரு மாதமாக கொள்முதல் நிலையங்களில் காத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர கூட்டத்திற்கு வந்த செருதியூர் பகுதி விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை வைத்துக்கொண்டு ஒரு மாதமாக காத்திருப்பதாகவும் குறைந்த அளவே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால் தங்களின் மூட்டைகள் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளதாகவும் உடனடியாக செருதியூர் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்பி வைத்து விவசாயிகளின் நெல்லை தங்கு தடை இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக விவசாயிகள் கூறினர்.
