மயிலாடுதுறை அருகே நீர் வழிப்பாதையை தடுத்து ஆகாயத்தாமரைகள், கோரைகள் மண்டி காடு போல் காட்சி அளிக்கும் வெட்டாற்றை தூர்வாரி தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருமங்கலம், செண்பகச்சேரி, பாண்டூர், பனையூர், கொளத்தூர், மணலூர், ஆந்தகுடி, ஆலங்குடி, கோட்டூர், அன்புநாதபுரம், உக்கடை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூர், தேவனூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எல்லை வாய்க்கால் என்று அழைக்கப்படும் வெட்டாறு, கணபதியாறு பாசன வாய்க்காலாகவும் வடிகாலாகவும் விளங்கி வருகிறது.
அருண்மொழித்தேவன் பாண்டூர் மணலூர் உக்கடை கங்கனம்புத்தூர் போன்ற கிராமங்களுக்கு வடிகாலாக விளங்கும் இந்த வெட்டாற்றில் ஆகாயத்தாமரைகள் மண்டி நீர்வழிப் பாதையை தடுத்துள்ளதால் விவசாயிகள் விவசாய நிலங்களில் உள்ள தண்ணீரை வடியமைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அறுவடை செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்படுவதாகவும், தொடர்ந்து சம்பா சாகுபடி செய்ய வேண்டியுள்ளதால் வெட்டாற்றை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வெட்டாறு தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரைகள் கோரைகள் மண்டி காடுகள் போன்று வெட்டாறு உள்ளதால் தண்ணீரை வடிய வைக்கமுடியவில்லை என்று குற்றம்சாட்டும் விவசாயிகள் உடனடியாக தங்கு தடை இன்றி விவசாய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வெட்டாறை தூர்வாரி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
