மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலையம் புனரமைப்பு பணிகள் விவசாயிகள் சங்கத்தினர் மனு

மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலையம் புனரமைப்பு பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றம்சாட்டி, விரைந்து பணிகளை முடிக்ககோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ரயில் நிலைய மேலாளரிடம் மனு அளித்துள்ளனர்:-

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ‘அமிர்த் பாரத்’ திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில், நிலைய மேலாளருக்குப் புகார் மனு ஒன்றை விவசாயிகள் அளித்தனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் ‘அமிர்த் பாரத்’ திட்டம் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் இன்னும் மந்தமாகவே நடந்து வருகின்றன. இதனால் தினசரி பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 3 மற்றும் 4-வது நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் (Escalators) மற்றும் மின்தூக்கி (Lift) பணிகள் முடிந்தும், அவை இன்னும் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே காவல் நிலையம் மற்றும் தபால் நிலையத்தை இடித்துவிட்டு, 1-வது நடைமேடையில் இருந்து 5-வது நடைமேடையை இணைக்கும் புதிய மேல்மட்டப் பாதை மற்றும் மின்தூக்கிப் பணிகள் பல ஆண்டுகளாக இழுபறியாகவே நீடிக்கின்றன. 1-வது நடைமேடை காலியாக இருக்கும்போது கூட, வெளியூர் ரயில்கள் வேண்டுமென்றே 3-வது நடைமேடையில் நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் ‘மலைக் கோயில்’ போன்ற செங்குத்தான பழைய படிக்கட்டுகளில் சுமைகளைச் சுமந்து கொண்டு, மூச்சுத் திணற ஏறி இறங்க வேண்டிய அவல நிலை உள்ளது. திருவாரூர் வழித்தடப் பாதையை மற்ற 3, 4, 5, 6 ஆகிய வழித்தடங்களுடன் முழுமையாக இணைக்கும் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. மேலும், மாப்படுகை மற்றும் நீடூர் ரயில்வே மேம்பாலப் பணிகளும் எப்போது துவங்கும் என்றே தெரியவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணச்சீட்டு வழங்கும் இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பயணச்சீட்டு வழங்கும் ஊழியர்கள் பயணிகளை அலட்சியப்படுத்துவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்தம் மிகத் தூரத்தில் உள்ளதால், வாகனங்களை நுழைவாயில் அருகிலேயே நிறுத்த மாற்று ஏற்பாடு செய்ய போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அளித்த மனுவில் கோரிக்கை வித்துள்ளனர்.

Exit mobile version