தோல்வி என்பது வெற்றியின் அடுத்த படி: திருச்சி ஜமால் முகமது கல்லூரி விழாவில் ஜே.என்.யு பேராசிரியை மஞ்சு காரி அதிரடி முழக்கம்!

திருச்சிராப்பள்ளியின் கல்விப் பாரம்பரியத்தில் தனி முத்திரை பதித்து வரும் ஜமால் முகமது கல்லூரியின் (பெண்கள் பிரிவு) 27-வது கல்லூரி நாள் விழா, நேற்று பிற்பகல் கல்லூரியின் நவீன குளிர்மை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பள்ளி பேராசிரியை மஞ்சு காரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகளிடையே ஊக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கவும், பெரும் வெற்றிகளை அடையவும் இக்கல்லூரி ஒரு மிகச்சிறந்த மைல்கல்லாக விளங்குவதாகப் பாராட்டியதோடு, இத்தகைய புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதைப் பெரும் பெருமையாகக் கருதுவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கல்வி என்பது வெறும் பாடப்புத்தகங்களைக் கற்பது மட்டுமல்ல, அது மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்ப்பதாக அமைய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டையும் மாணவர்கள் சமமாகப் பார்க்கப் பழக வேண்டும் எனவும், தோல்வி என்பது ஒருபோதும் எதிர்மறையானது அல்ல, மாறாக அது வெற்றியின் அடுத்த நிலை என்று மாணவிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டினார்.

எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும்போதும் சோர்வடையாமல், எடுத்த காரியத்தை இனிதே முடிக்க மனதில் உறுதியோடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய பேராசிரியை மஞ்சு காரி, இதற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிட்டு, அவரைப் பின்பற்றி மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக, கல்லூரி முதல்வர் ஜார்ஜ் அமலரெத்தினம் வரவேற்புரையாற்றி, 2025-26 ஆம் கல்வியாண்டின் சாதனைகள் நிறைந்த ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் அ.கா.காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே.ஜமால் முகமது, உதவிச்செயலாளர் முனைவர் கா.அப்துஸ் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், உறுப்பினர் மற்றும் மதிப்புறு இயக்குநர் அப்துல் காதர் நிஹால், விடுதி நிர்வாக இயக்குநர் முகமது ஃபாசில் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது கலைப்பிரிவில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை பரமேஸ்வரிக்கும், அறிவியல் பிரிவில் வேதியியல் துறை உதவிப் பேராசிரியை சம்சாத் பேகத்திற்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நூலகத்தை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தியதற்கான விருதினை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை கலையரசி பெற்றார். அத்துடன், பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் (Rank Holders) இடம்பிடித்த மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், கூடுதல் துணை முதல்வர்கள் இசாக் அஹமது, ஹாஜா மொகைதீன் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக, பெண்கள் பிரிவு அறிவியல் புல முதன்மையர் வஹிதா கஃபாதீன் நன்றி கூறினார்.

Exit mobile version