செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த எக்ஸல் கல்லூரி நிர்வாகம்

செய்தி சேகரித்த செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த எக்ஸல் கல்லூரி நிர்வாக ஊழியர்களால் பரபரப்பு…

நாமக்கல் மாவட்டம் எக்ஸல் கல்வி நிறுவனத்தில் இரு தினங்களுக்கு முன்னர் உணவு அருந்திய 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு உணவகம் மற்றும் குடிநீர் தொட்டிகள் சரிவர பராமரிக்கப்படாததை கண்டறிந்து பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இந்நிலையில் வரும் 2ம் தேதி வரை 5 நாட்களுக்கு கல்லூரிக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவிட்டார். இது குறித்த செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுப்பதை தடுக்கும் நோக்கில் எக்ஸல் கல்லூரி பணியாளர்கள் தங்களது செல்போனில் செய்தியாளர்களை புகைப்படம் எடுத்தனர். இதனை தட்டி கேட்ட செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் தற்பொழுது கல்லூரியில் இருக்கும் ஒரு சில மாணவர்களும் கல்லூரியை விட்டு தங்களது வீடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர் .தொடர்ந்து கல்லூரி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version